Friday, April 13, 2018

ஜம்..ஜம்..ஜமுனாபாரி !

ஆண்டுக்கு 20 லட்சம்... அள்ளிக்கொடுக்கும் ஆடுகள்..


விவசாயத்தின் துணைத்தொழிலாக இருந்து வந்த கால்நடை வளர்ப்பு, தற்போது முக்கியத் தொழிலாக உருவெடுத்து வருகிறது. அதிலும் 'ஏழைகளின் பசுக்கள்’ என்று அழைக்கப்படும் 'ஆடு’களை வளர்க்கும் தொழில்... அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. முறையான தொழில்நுட்பங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்பவர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கின்றன, ஆடுகள். அந்த வகையில், இத்தொழிலில் நல்ல வருவாயை ஈட்டி வருகிறார், ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகேயுள்ள நாச்சிவலசு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி. பகல் பொழுதொன்றில் அவருடைய பண்ணைக்குள் நுழைந்தோம். மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேசத் தொடங்கிய குமாரசாமி, ''நமக்கு விவசாயந்தானுங்க குலத்தொழில். 10 ஏக்கர் நிலத்தை வெச்சு பண்ணையம் பண்ணிக்கிட்டு இருக்கேன். 3 ஏக்கர்ல மரவள்ளி;3 ஏக்கர்ல மஞ்சள்; 3 ஏக்கர்ல வேலிமசால், கோ-4, கோ.எஃப்.எஸ்-29 தீவனப் பயிர்கள்னு எல்லாம் இருக்கு. மீதி ஒரு ஏக்கர்ல ஆடு ஷெட், வீடு இது ரெண்டும் இருக்கு.

சின்னவயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல நல்ல ஈடுபாடு. வெவசாயத்தை கையில எடுத்த பிறகு, காங்கேயம் மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சேன். 98-ம் வருஷம் காட்டுப்பாக்கத்துல ஆடு வளர்ப்புப் பயிற்சி கொடுத்தாங்க. அதுல பயிற்சி எடுத்ததுக்குப் பெறகு பண்ணை வெக்கலாம்னு தைரியம் வந்துச்சு. ஆனா, எல்லாருந்தான் பண்ணை வெக்குறாங்க... நாம வித்தியாசமா பண்ணனும்னு நெனைச்சேன். அப்பத்தான் ஜமுனாபாரி ஆடுகளை மட்டும் வளர்க்கலாம்னு தோணுச்சு. 10 ஆடுகள வாங்கிட்டு பண்ணையை ஆரம்பிச்சு... இப்போ 10 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சுங்க. மொத்தம் 90 பெட்டை, 4 கிடா இப்ப இருக்கு.

கொட்டிலில் பணத்தைக் கொட்ட வேண்டாம்!


பல பேரு ஆட்டுப் பண்ணை வெக்குறேனுட்டு கொட்டில் அமைக்க லட்ச லட்சமா செலவு செய்றாங்க. முழுக்க இரும்புச் சட்டத்துல அமைச்சாதான் ரொம்பநாள் தாங்கும்னு சொல்லி அதுலதான் அமைப்பாங்க. ஆனா, அம்புட்டு செலவு செஞ்சு கொட்டில் அமைக்கத் தேவைஇல்லீங்க. நான் பனை மர சட்டம், அமைச்சேன். கீழ தூணுக்குப் பதிலா தைல மரக்கட்டைகளை வெச்சிருக்கேன். (எக்காரணத்தைக் கொண்டும், தென்னை ரீப்பரை பயன்படுத்த கூடாது. ஆடுகள் தென்னை ரீப்பரை கடித்து, துப்பிவிடும்.) பத்து வருஷம் ஆகியும் இது இன்னமும் நல்லாத்தான் இருக்கு. ராத்திரி ஆடுகள அடைக்கறதுக்கு மட்டும்தான் கொட்டிலைப் பயன்படுத்துறேன். அதனால, கொட்டிலுக்குள்ள தீவனம், தண்ணி வெக்கிறதுக்கெல்லாம் தனி அமைப்புகள் கிடையாது. அதனால செலவு குறைஞ்சுடுச்சு. இப்படி குறைக்கிற செலவுல இன்னும் நாலு ஆடுகளைச் சேர்த்து வாங்கி விடலாம்'' என்ற குமாரசாமி, தொடர்ந்து பண்ணையைப் பற்றிச் சொன்னார்.

காலாற நடக்க காலியிடம்!


'60 அடி நீளம், 20 அடி அகலத்துல தரையில இருந்து 3 அடி உயரம் விட்டு ஒரு கொட்டில் இருக்கு. இது ஆரம்பத்துல அமைச்சது. ஆஸ்பெஸ்டாஸ்ல கூரை போட்டு, கொட்டிலுக்கு உள்ளயே 10 அடி நீளம், 20 அடி அகல இடத்தை குட்டிகளுக்காக ஒதுக்கியிருந்தேன். கொட்டிலுக்கு வெளியே கால் ஏக்கர் அளவுக்கு காலி இடம் இருக்கு. அதுல கொஞ்சம் தென்னை மரங்க இருக்கறதால, வெயில் அதிகமா விழாது. அதை சுத்தி வேலி போட்டு, பகல் பொழுதுல ஆடுகளை அதுக்குள்ள மேய விடுவேன். சாயங்காலம் ஆடுக தானாவே கொட்டில்ல அடைஞ்சுக்கும். அதிக வெயில் அடிச்சாலோ, மழை வந்தாலோ... தானாவே கொட்டிலுக்குள்ள போயிடும்.

இந்த இடத்துல தண்ணிக்காக மூணு இரும்புத் தொட்டிகள் இருக்கு. அதுல தினமும் தண்ணியை நிரப்பிட்டா ஆடுக தேவைப்படும்போது குடிச்சுக்கும். அதேமாதிரி, தீவனத்தை நான் நறுக்கிப் போடுறதில்லை. அங்கங்க குச்சிகளை நட்டு, அதுல சோளப்பயிர், வேலிமசால், தீவனப்பயிர் எல்லாத்தையும் கட்டி தொங்க விட்டுடுவேன். இப்படிச் செய்றதால, தீவனம் கொஞ்சம் வீணாகும். ஆனா, தலையை உயர்த்தி தீனி எடுக்கறதுதான் ஆடுகளோட வழக்கம்கறதால... அதோட இயல்புலயே விட்டுடறேன். கிடாய்களை மட்டும், நீளமான கயிறு போட்டு தென்னை மரத்துல கட்டி வெச்சுடுவேன். பருவத்துக்கு வர்ற பெட்டைக, தானா கிடா கிட்ட வந்து சேர்ந்துக்கும். எல்லாமே இயல்பா நடக்கறதால, பருவம் தப்பாம குட்டிக கிடைச்சுடுது.

இப்ப, புதுசா 30 அடி நீளம், 10 அடி அகலம், 4 அடி உயரத்துல ஒரு கொட்டில் அமைச்சுருக்கேன். அதுலதான் இப்போ குட்டி போட்ட ஆடுகளையும், குட்டிகளையும் விடுறேன். பெரும்பாலும் நானும், என் மனைவியுமே எல்லா வேலைகளையும் பாத்துடுவோம். இப்ப, கொஞ்ச நாளா தீவனம் அறுக்குறதுக்கு மட்டும் ஒரு ஆளை வேலைக்கு வெச்சுருக்கோம்'' என்ற குமாரசாமி பராமரிப்பு பற்றிய விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

'முறையா பராமரிச்சா ஆடுகளுக்குப் பெருசா நோய் தாக்காது. வெளி மாநிலங்கள்ல இருந்து வாங்கிட்டு வர்ற ஆடுகளுக்குக் கண்டிப்பா பி.பி.ஆர் (Peste des petits ruminants-PPR) தடுப்பூசி போட்டு, தனியா ஒரு மாசத்துக்குப் பிரிச்சு வெச்சுடணும். அதுக்கப்பறம்தான் பட்டியில மத்த ஆடுகளோட சேர்க்கணும். இந்த ஒரு மாசத்துக்குள்ள அதுக்கு எந்த நோய் தாக்கியிருந்தாலும், தெரிஞ்சு போயிடும். ஆடுகளுக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்யணும்.
சில நேரங்கள்ல தோல்ல ஏதாவது அடிபட்டு, புண்ணாகி அது முடிக்குள்ள மறைஞ்சுடும். வெளிய தெரியாமலே சீழ் பிடிச்சுடும். அதேமாதிரி அதிக முடி இருந்தா... பேன், உண்ணிகளும் தெரியாது. அதனால, வருஷத்துக்கு ஒரு தடவை உடம்புல இருக்குற முடிகளை ஒட்ட வெட்டி விட்டுடணும். இதனால ஆடுகளும் ஆரோக்கியமா வளரும். முடிவெட்டி விடுறதுக்கு தனியா ஆளுங்க இருக்காங்க.

ஒரு ஆட்டுக்கு 100 ரூபா வாங்கறாங்க. ஆடுகள் உலாத்துறதுக்கான இடம் மண்தரையா இருக்கணும். அப்பதான் கழிவுகள் மண்ல கலந்துக்கும். மண்ல தண்ணி, சிறுநீர் தேங்காமப் பாத்துக்கணும். தேங்கி நின்னா.. குளம்புல புண்ணு வந்துடும். குட்டிகளை மூணு மாசம் வரைக்கும் கொட்டில்ல இருந்து வெளிய விடக்கூடாது. கொட்டில்ல கொசுக்கள் இருக்கக் கூடாது'' என்ற குமாரசாமி, நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

'மத்த ஆடுகளைவிட, ஜமுனாபாரிக்கு எப்பவும் நல்ல கிராக்கி இருக்கு. பெரிய உருவம், காது, அதிக பால்னு பல விஷயங்களால இந்த ரகத்தை விரும்பி வளர்க்கறாங்க. பெரிய பண்ணையா இல்லாட்டியும் ஆசைக்காக, அழகுக்காக ஒண்ணு ரெண்டு வளர்க்கறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. மூணு மாச வயசுல, ஒரு குட்டி 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. நல்ல பிரவுன் கலர் குட்டியா இருந்தா அதிக விலை கிடைக்குது.

ஜமுனாபாரி ஆடு ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி போடும். ரெண்டு வருஷத்துக்கு மூணு ஈத்து. இதன் மூலமா ரெண்டு வருஷத்துல 6 குட்டிகள் கிடைக்கும். இந்தக் கணக்குப்படி, ஒரு ஆடு மூலமா வருஷத்துக்கு 3 குட்டிகள் கிடைக்கும்.

சராசரியா 70 ஆடுகள் மூலமா... வருஷத்துக்கு 210 குட்டிகள் கிடைக்கும். வருஷத்துக்கு 200 குட்டிகளுக்குக் குறையாம வித்துடுவேன். ஒரு குட்டி 10 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே... 20 லட்ச ரூபாய் வருமானம். அதுபோக, ஒவ்வொரு வருஷமும் 10 டன் புழுக்கை கிடைக்கும், அது டன் 4 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகுது. இந்தப் பணமே பண்ணை பராமரிப்புக்குப் போதுமானதா இருக்கும். குட்டிகள் மூலமா கிடைக்கிற பணம் முழுசும் லாபம்தான்.

ஜமுனாபாரி ஆடுக 10 ஈத்து வரைக்கும் குட்டி ஈனும். 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குற ஒரு குட்டியை வளர்த்தா... அது மூலமா, 20 குட்டிக கிடைக்கும். ஒரு குட்டி 10 ஆயிரம் ரூபாய்னு வித்தாலே, 2 லட்ச ரூபாய் கிடைச்சுடும். இந்த லாபம்தான் ஜமுனாபாரிக்கும் மத்த ரக ஆடுகளுக்கும் உள்ள வித்தியாசம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு :
குமாரசாமி, செல்போன்: 98652-46868
முரளி, தொலைபேசி: 04298-262023.

எலும்புதான் எடை !


ஜமுனாபாரி ஆடுகளைப் பற்றி பேசும் சேலம் மாவட்டம் பொட்டனேரியில் உள்ள மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் டாக்டர் முரளி, ''ஜமுனாபாரி ஆடுகளைப் பொறுத்தவரை குட்டிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பெரிய ஆடுகளை கறிக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆடுகளில் எலும்பின் எடை, கறியின் எடையைவிட அதிகமாக இருக்கும். இந்த ரகத்தில் ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் பால் வரை கிடைக்கும் என்பார்கள். அது தவறு. மற்ற ரகங்களைவிட கொஞ்சம் அதிகமாகப் பால் கிடைக்கும், அவ்வளவுதான். சிலர் குட்டிகள் குடித்தது போக, மீதமுள்ள பாலைக் கறந்து விடுவார்கள். அப்படிச் செய்யக் கூடாது. முழுப்பாலையும் குட்டிகளுக்கே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் குட்டிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்'' என்கிறார்.

No comments:

Post a Comment