Friday, September 29, 2017

நீர் மேலாண்மை - புதிய வழி

நீர் மேலாண்மை






கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவும் வறட்சியால், அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படும் பகுதிகளான கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கருகி மொட்டையாக நிற்கின்றன. தண்ணீர் வளம், தென்னைக்கான தட்பவெப்பச் சூழல் உள்ள இப்பகுதிகளிலேயே தென்னைக்கு இந்த நிலையென்றால், தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தென்னை மட்டுமல்ல மா, கொய்யா, மரப்பயிர்கள் என அனைத்துக்கும் இந்த நிலைதான்.



இப்படி இயற்கை சொல்லிக் கொடுத்த பாடத்தால், நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகச் சிக்கன பாசன முறைகளை விவசாயிகள் தேட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், நேரடியாக வேருக்குப் பாசனம் செய்யும் முறையை வடிவமைத்திருக்கிறார், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றி வரும் சத்யகோபால் ஐ.ஏ.எஸ். இவரது தொழில்நுட்பத்துக்காகக் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. அதோடு இத்திட்டத்தைத் தமிழகம் முழுவதும் பரவலாக்க வேண்டும் என வேளாண்மைத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

இத்திட்டத்தை வடிவமைத்த சத்யகோபாலைச் சந்தித்துப் ‘பசுமை விகடன்’ சார்பில் வாழ்த்துகளைச் சொன்னோம். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட சத்யகோபால், “நான் விலங்கியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவன். நீர் மேலாண்மை மற்றும் மரங்கள் வளர்ப்பில் ஆர்வம் உடையவன். விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனப்படுத்தத் தற்போது சொட்டு நீர்ப் பாசனத்தையே பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வறட்சி குறைந்தபாடில்லை. அதற்காகத்தான் பயிருக்கு நேரடியாக நீர் பாய்ச்சும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தேன். இத்தொழில்நுட்பத்தின்மூலம் 60 சதவிகிதம் நீரை மிச்சப்படுத்தலாம். இத்தொழில் நுட்பத்தைக் கடைபிடிக்கும்போது கன்றுகள் மிக வேகமாக வளர்கின்றன. இத்தொழில்நுட்பத்தை மதுரை, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தி இருக்கிறோம். புதிய கன்றுகளுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்த மரங்களுக்கும் கூட இத்தொழில்நுட்பம் தண்ணீர்ச் சிக்கனத்துக்குக் கைகொடுக்கும்” என்றவர் தனது தொழில்நுட்பம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.



“இரண்டு அடி சதுரம், இரண்டு அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். குழியின் மையப்பகுதியில், குழி தோண்டும் கருவி அல்லது கடப்பாரை மூலம் மேலும் ஓர் அடி அளவில் துளை போலக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மையத் துளையில் தலா இரண்டு கைப்பிடியளவு சலித்த மண்புழு உரம் அல்லது எரு இட்டு, ஆற்று மணல் கொண்டு நிரப்பி விட வேண்டும்.

அடுத்து குழியின் நான்கு முனைகளிலும் நான்கு அங்குல விட்டம் கொண்ட பி.வி.சி குழாய்களை நிறுத்தி வைத்துத் தோண்டிய மண்ணுடன் தேவையான அளவு சலித்த மண்புழு உரம் அல்லது எரு கலந்து குழியை நிரப்ப வேண்டும். பிறகு குழியின் மையத்தில் சிறிய பள்ளம் தோண்டி அதில் இரண்டு கைப்பிடி அளவு சலிக்காத மண்புழு உரத்தைப்போட்டு மரக் கன்றை நடவுசெய்ய வேண்டும். அடுத்து நான்கு பி.வி.சி குழாய்களுக்குள்ளும் தலா இரண்டு கைப்பிடி அளவு சலித்த மண்புழு உரம் அல்லது எருவை இட வேண்டும். அதற்கு அடுத்த அடுக்காக இரண்டு கைப்பிடி ஆற்று மணல் அல்லது செறிவூட்டப்பட்ட தேங்காய் நாரை இட வேண்டும். அடுத்த அடுக்காக 50 கிராம் அளவு உயிர் உரத்தை இட வேண்டும். பிறகு பிவிசி குழாய்களை உருவி விட்டுக் மரக்கன்றைச் சுற்றித் தண்ணீர் ஊற்ற வேண்டும். தென்னை, மா, கொய்யா, சப்போட்டா என அனைத்துப் பயிர்களையும் இப்படி நடவுசெய்ய முடியும்” என்ற சத்யகோபால் நிறைவாக,


“இப்படி நடவு செய்துவிட்டால், ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும், நான்கு மூலைகளிலும் உள்ள உரக்கலவையின் வழியாகத் தண்ணீர் எளிதாக ஊடுருவிச் செல்லும். அதனால், வேரின் அருகே உள்ள மண்ணில் நீர்ப் பிடிப்புத் தன்மை அதிகரிக்கும். பயிருக்கு ஊட்டம் கிடைத்துக்கொண்டே இருக்கும். சொட்டு நீர் அமைப்புமூலம் பாசனம் செய்யும்போதும் இம்முறையைப் பயன்படுத்த முடியும்” என்றார்.

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சி.மௌனகுருசாமியிடம் பேசினோம். “ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, எங்க பகுதியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கூட்டம் போட்டு, இந்தத் தொழில்நுட்பம் பத்திச் சொன்னாங்க. அதோட செயல் விளக்கமும் காட்டினாங்க. அதை என்னோட தோப்புல இருக்குற 200 தென்னை மரங்கள்ல செயல்படுத்திப் பார்த்தேன். ஏற்கெனவே நடவு செஞ்சு பதினஞ்சு வயசான மரங்கள் எல்லாம். ஒவ்வொரு மரத்தைச் சுத்தியும் நாலு மூலைகள்ல துளை போட்டு பி.வி.சி குழாயைச் செருகி மணல், தொழு உரம், செறிவூட்டப்பட்ட தென்னைநார்க் கழிவு மூணையும் அடுக்கடுக்கா நிரப்பிக் குழாய்களை உருவிட்டேன். இப்படிச் செஞ்சு தண்ணீர் பாய்ச்சுறதால மரங்கள் எப்பவும் பசுமையா தளதளனு இருக்கு. அதோட தண்ணீர் தேவையும் மிச்சமாகுது. இப்போ தண்ணீர்ப் பற்றாக்குறையால வழக்கமா கொடுக்குற தண்ணீர் அளவுல பாதிகூடக் கொடுக்க முடியலை. ஆனாலும், மரங்கள் பசுமையா இருக்கு. கன்னு நடவு செய்யும்போதே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திட்டா இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்” என்றார்.  

இதே பகுதியைச் சேர்ந்த பி.கே.செல்வராஜ், “என்னோட தோப்புல காய்ப்புல இருந்த கொஞ்ச தென்னை மரங்கள் காய்ஞ்சு போச்சு. அதனால அந்த மரங்களை வெட்டிட்டுப் புதுசா கன்னுகளை வெச்சேன். நடவு செய்யும்போதே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் நடவு செஞ்சேன். நடவு செஞ்ச கொஞ்ச நாள்லயே சுத்தமா கிணத்துல தண்ணி இல்லாமப் போயிடுச்சு. மழையும் இல்லை. ஆனாலும், ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் பாசனம் இல்லாத நிலையிலயும் மூணு மாசம் வரைக்கும் கன்னுகள் பசுமையா இருந்துச்சு. இப்போ, கொஞ்சம் மழை கிடைச்சதுல அருமையா வளருது. எல்லா மரப்பயிர்களுக்கும் இதைக் கடைபிடிச்சா கண்டிப்பா தண்ணீர்த் தேவையைக் குறைக்க முடியும்” என்றார்.

பஞ்சகவ்யாவால் பலன் கூடும் 

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, “ நான் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு துளையிலயும் 10 மில்லி பஞ்சகவ்யாவை ஊத்தி விட்டேன். மணல், தொழு உரம், தென்னை நார் கழிவுகளைப் பயன்படுத்தலை. அதோட, தொடர்ந்து பாசனத் தண்ணீர்லயும் பஞ்சகவ்யாவைக் கலந்து விட்டேன். அதனால, குரும்பை உதிர்றது நின்னு நல்லா காய்பிடிக்கிது” என்கிறார்.விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு

திருப்பூர் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனர் எம்.தமிழ்செல்வன், “தென்னை மரங்கள் அதிகம் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம் பகுதி விவசாயிகள் மத்தியில் இந்தத் திட்டம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முன்னோடி விவசாயிகளின் தென்னை மரங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி மாதிரிப் பண்ணைகளாக மாற்றி, மற்ற விவசாயிகள் அவற்றைப் பார்வையிட ஏற்பாடு செய்கிறோம்” என்றார்.

No comments:

Post a Comment