Monday, October 9, 2017

பொலி கிடாக்கள்

ஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம்




விவசாயிகள் நல்ல தரமான ஆட்டு பண்ணையை உருவாக்க பண்ணையில் சிறந்த பொலிகிடாக்களை பராமரிப்பது அவசியமானது.

தரமான ஆடுகள் :

ஆட்டு பண்ணைகளின் லாபம் என்பது அங்கு வளர்க்கப்படும் தரமான, ஆரோக்கியமுள்ள ஆடுகளை சார்ந்து இருக்கின்றது. தரமுள்ள ஆடுகளை உருவாக்க பெரிதும் துணை புரிவது அந்த பண்ணையில் உள்ள ஆரோக்கியமான பொலி கிடாக்களும், பெட்டை ஆடுகளுமே ஆகும். நல்ல தரமான ஆட்டு குட்டிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலி கிடாக்களும் மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, நல்ல பொலிகிடாக்கள் நல்ல குட்டிகள் உருவாவதில் 80 முதல் 90 சதவிகிதம் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நல்ல பொலி கிடாக்களை தேர்வு செய்வதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.

பொலி கிடாக்கள் தேர்வு :

விவசாயிகள் புதிய பண்ணை தொடங்கும் போது கிடாக்களை வேறு பண்ணைகளில் இருந்தோ அல்லது சந்தையில் இருந்தோ வாங்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் குட்டிகள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதே போல் தேர்ந்தெடுக்கும் கிடாக்கள் காய்ச்சல், நுரையீரல் நோய்கள், வயிற்று உப்புசம், கண்வலி, வாய்ப்புண், கால்புண் மற்றும் இனப்பெருக்க உறுப்பு போன்ற நோய் அறிகுறிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆண் தன்மை, பிரகாசமான கண்கள் மற்றும் ஆரோக்கிமான தோல் உடைய ஆடுகளை வாங்க வேண்டும். பொலி கிடாக்களை வாங்கும் பொழுது தரமான இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவற்றை வாங்க வேண்டும்.
பொதுவாக, கிடாக்களில் நன்றாக வளர்ச்சியடைந்த இரண்டு விரைகளும் ஒரே அளவில் இருக்கும்படியான ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு விரைகளும் விரைப்பையில் இறங்காத ஆடுகளை தவிர்க்க வேண்டும். ஆடுகளில் விதைப்பையின் சுற்றளவு 25 முதல் 35 செ.மீ இருக்க வேண்டும். கால்கள் மற்றும் பாதங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் சொந்த பண்ணையில் உள்ள ஆடுகளின் இனத்திற்கு ஏற்ப ஒரே இனத்தை சேர்ந்த வயது வந்த கிடாக்களையே தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, 8 முதல் 10 வயதுடைய கிடாக்கள் சினைக்கு விடத் தகுதியானவை. ஆனால், ஒரு ஆண்டு வயதுடைய ஆடுகளை சினைக்கு அனுமதிக்கலாம். ஆடுகளை சினைக்கு 6 வயது வரை பயன்படுத்தலாம். இனப்பெருக்கத்திற்கு தேவையான கிடாக்களை அவை குட்டிகளாக இருக்கும் பொழுது தேர்வு செய்வதுடன், தாயிடம் இருந்து பிரித்த பிறகு 3 மாத எடையின் படி அதிக எடை உடைய குட்டிகளை தேர்வு செய்யலாம்.

இனப்பெருக்க கிடாக்கள் பராமரிப்பு :

தேர்ந்தெடுக்கப்பட்ட கிடாக்குட்டிகளுக்கு மேய்ச்சலுடன் தனியாக 100 கிராம் அளவு அடர்தீவனம் மற்றும் சுத்தமான தண்ணீர் தர வேண்டும். இனப்பெருக்கத்திற்கு விடும் முன்னால் கிடாக்களின் இனப்பெருக்க உறுப்பை சுற்றி உள்ள உரோமத்தை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். காலின் குளம்பை சீராக வெட்டி விட வேண்டும். கிடாக்களை தனியாக கட்டி போடாமல் சுதந்திரமாக அதன் கொட்டகையில் உலாவ விட வேண்டும். கிடாக்களுக்கு மற்ற ஆடுகளுக்கு போடுகின்ற தடுப்பூசிகளையும், குறிப்பாக துள்ளுமாரி, கோமாரி நோய்களுக்கான தடுப்பூசிகளையும், குடற்புழு நீக்கமும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக்கு விடும் பெட்டை ஆட்டின் இனப்பெருக்க உறுப்பின் பகுதிகள் சாணம் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். இனச்சேர்க்கைக்கு ஒரு கிடாவையும், ஒரு பெட்டை ஆட்டையும் விட்டு மூன்று முறை இனச்சேர்க்கை நடந்த பின் கிடாவையும், பெட்டை ஆட்டையும் பிரித்து விட வேண்டும். காலையில் வெயில் வரும் முன்பு இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக்கு பிறகு கிடாக்களை உடனே மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

பொதுவாக, பொலி கிடாக்களை ஒன்று முதல் 6 வயது வரை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து ஒரே கிடாவை பயன்படுத்தினால் சில மரபியல் தொடர்பான நோய்கள் வரக்கூடும். எனவே, ஒரு கிடாவை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தி விட்டு அவற்றை பண்ணையில் இருந்து நீக்கி விடலாம். தரமுள்ள பொலி கிடாக்களும், பெட்டைகளும் உள்ள பண்ணைகளில் மிகச்சிறந்த ஆட்டு குட்டிகளை விவசாயிகள் தொடர்ந்து பெற முடியும்.

பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter)

பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter) :



* பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சிறு சிறு துண்டுகளாக ( 1” அளவிற்கு) நறுக்க உதவும் கருவியே பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter).

* நறுக்கும்போது சுவை கூடுவதால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகமாகிறது.

* செரிமானத் தன்மை அதிகரிப்பதால் அதிக சக்தி கால்நடைகளுக்கு கிடைக்கிறது.இதனால் பால் உற்பத்தி கூடுகிறது.

* 20-30% தீவன சேதாரம் குறைகிறது. இதனால் சாதாரணமாக 3 கால்நடைகளுக்கு அளிக்கும் பசுந்தீவனத்தை, நறுக்கி போடும்போது 4 கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

* சேதாரம் குறைவதால் கட்டுத் தரையை சுத்தம் செய்யும் வேலை குறைகிறது.

* கட்டுத்தரையை சுத்தம் செய்ய ஆகும் நேரத்தில் பாதி நேரம் செலவிட்டால் போதும் நறுக்கி போட்டு விடலாம்.

* சிறு பண்ணையாளர்கள் கையால் நறுக்கும் கருவியை பயன்படுத்தலாம்.

பசுந்தீவன நறுக்கி மற்றும் அரவை திறன் (மணிக்கு) :

கையால் இயக்குவது - 50-70 கிலோ

மின் மோட்டரால் இயங்குவது :

* 1 குதிரை திறன் (1 HP Motor) - 200-250 கிலோ

* 1.5 குதிரை திறன் (1.5 HP Motor) - 300-350 கிலோ

* 2 குதிரை திறன் (2 HP Motor) - 500-600 கிலோ

குறிப்பு : விலை நிலவரம் தெரியவில்லை, நண்பர்கள் யாராவது விற்றாலோ அல்லது சமீபத்தில் வாங்கி இருந்தாலோ அதன் விலை மற்றும் விற்பனையாளர்களின் விபரங்களை கமெண்டில் தெரிவிக்கவும். மற்ற நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி!!!

வேலி மசால்

வேலி மசால் :



பருவம் :

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.

உழவு :

இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

பார்கள் அமைத்தல் :

50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

உரமிடுதல் :

மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.

விதையளவு :

எக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும். 3 பாக்கெட்டுகள் 600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

நீர் மேலாண்மை :

விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தத்து.

களை நிர்வாகம் :

தேவைப்படும் போது களை எடுக்கவும். அறுவடை விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு 50 செ.மீ. உயரத்தில் முதல் அறுவடை செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியில் செய்யவேண்டும்.

எக்டருக்கு 125 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.

கலப்புப் பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யவேண்டும்.

குறிப்பு :

விதைகள் நன்றாக விதை நேர்த்தி செய்யவேண்டும். கொதித்த நீரை 3-4 நிமிடங்கள் கீழே வைத்து, பின் அதில் வேலிமசால் விதைகளைப் போடவேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும்

வேலிமசால் விதைகளை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லுடன் 1:3 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யலாம்.

Friday, October 6, 2017

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு



காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.

இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள் :

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம்.

கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.

ஜப்பானியக் காடை இறைச்சி :

சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.

ஜப்பானியக் காடை விற்பனை :

ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது (விலை நிலவரம் இப்போது மாறுபட்டு இருக்கலாம்). காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

காடை இனங்கள் :

* நியூசிலாந்து காடை

* பாப் வெள்ளைக் காடை

* சைனாக் காடை

* மடகாஸ்கர் காடை

* கலிபோர்னியா காடை

* நியூகினியா காடை

* ஜப்பானிய காடை

ஜப்பானியக் காடை வளர்ப்பு முறை :

காடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.

ஆழ்கூள முறை :

ஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.

கூண்டு முறை வளர்ப்பு :

இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.

குஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5 அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.

குஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.

காடைத்தீவனம் :

காடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.

ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இனப்பெருக்கம் :

காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.

குஞ்சு பராமரிப்பு :

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான் இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப் புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்ிகன் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நோய்கள் :

காடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.

நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள் :

* தொப்புள் அழற்சி

* ஈகோலி நோய்

* காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்

* நுரையீரல் அழற்சி

* பூசண நச்சு.

மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

எனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக் கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்.

மண்ணின் தன்மைக்கு ஏற்ற தீவனப் பயிர்கள்

தீவனப் பயிர்கள் - மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகைகள்




களர் மற்றும் உவர் நிலம் :

* கினியா புல்
* வேலி மசால்
* நீர்ப்புல்
* தட்டைப் பயறு

அமில நிலம் :

* முயல் மசால்
* தட்டைப் பயறு
* கினியாப் புல்

தரிசு நிலம் மற்றும் வரப்பு ஒரங்கள் :

* சூபாபுல்
* அகத்தி
* கிளைரிசிடியா

தண்ணீர் தேங்கிய நிலம் :

* நீர்ப் புல்

நிழலில் வளரக்கூடியவை :

* கினியாப் புல்
* டெஸ்மோடியம்

தீவனப் பயிர்கள் விதை நேர்த்தி :

* வேலிமசால், முயல்மசால் மற்றும் சூபாபுல் விதைகளை 80 செ.கி. வெந்நீரில் 5 நிமிடம் இட்டு பின்னர் விதைப்பு செய்தால் முளைப்புத்திறன் அதிகமாக இருக்கும்.

* புதிய கொழுக்கட்டைப் புல் விதைகள் விதை உறக்கத்தில் இருப்பதால் விதைகளை 1 % பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 2 நாட்களுக்கு ஊற வைத்து பின் விதைக்கவும்

தீவன தட்டை பயிறு - Fodder Cowpea :

* புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர்.

* 30 - 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.

* இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு.

* உலர் தீவனம் தயாரிக்க உகந்தது.

* ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.

பசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை

பசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை




* மாடுகளின் வயதை அதன் கீழ்த் தாடையிலுள்ள எட்டு நிரந்தர முன் வரிசைப் பற்களின் வளர்ச்சியை வைத்து கணக்கிடலாம்.

* மாடுகளில் நிரந்தரப் பற்களாக் கீழ்தாடையில் 4 ஜோடி அதவாது 8 முன் வரிசைப்பற்கள் இருக்கும், மேல் தாடையில் முன் வரிசைப்பற்கள் இருக்காது.

* பொதுவாக கலப்பின மாடுகளில் 2 வருட வயதில் மத்திய ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.

* 2 1/2 வருட வயதில் இரண்டாவது ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.

* 3 வருட வயதில் 3 வது ஜோடி பற்களும்

* 3 1/2 - 4 வருட வயதில் கடைசி ஜோடி நிரந்தர முன்வரிசைப் பற்களும் முளைத்து விடும்.

* 6 வருட வயதில் இருந்து இப்பற்கள் தேய ஆரம்பிக்கும்.

* 10 வயது ஆகும் போது எல்லா முன்பற்களுமே தேய்ந்த நிலையில் இருக்கும்.

Monday, October 2, 2017

இ.எம் தயாரிப்பது எப்படி

இ.எம் தயாரிப்பது எப்படி.?




ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்.

பப்பாளி-1 கிலோ,
பரங்கி-1 கிலோ,
வாழைப்பழம்-1 கிலோ,
நாட்டுச்சர்க்கரை-1 கிலோ,
முட்டை-1

செய்முறை :

பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும்.

முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும்.

இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும்.

15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது கலவையின் மீது வெண்மையான நிறம் தோன்றியிருந்தால் இ.எம். நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று அர்த்தம். அப்படி இல்லாவிட்டால், ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரையை போட்டு மூடிவைத்து விடவும்.

அடுத்த 15-ம் நாள்… அதாவது 30-ம் நாள் இ.எம் தயார். 10 லிட்டர் நீருடன் 500 மில்லி இ.எம். கலந்து தெளிக்கலாம்.

ஒரு சென்ட் நிலத்தில் 8 டன் இயற்கை உரம்

ஒரு சென்ட் நிலத்தில் 8 டன் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?




நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம்.

கழிவுகள் கலந்த கலவையை முதல் குழிக்குள் அரையடி ஆழத்துக்கு நிரப்ப வேண்டும். நுண்ணுயிர்கள் கலந்த தண்ணீரை 6 லிட்டர் அளவுக்கு, கழிவுகள் மீது தெளிக்க வேண்டும். மீண்டும் அரையடி உயரத்துக்குக் கழிவுகள், அதன் மீது 6 லிட்டர் நுண்ணுயிர்கள் கலந்த நீர் என அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, மூன்றடி ஆழமுள்ள குழியில் ஆறு அடுக்குகள் வரை போடலாம். இப்படிக் குழியை நிரப்பி, ’வினைல் ஷீட்’ கொண்டு மூடி, ஷீட் நகராத அளவுக்கு அதன் மீது மண்ணைப் போட்டு விட வேண்டும். அதாவது, குழிக்குள் காற்று புகாதவாறு மூடிவிட வேண்டும். இதே முறையில், மொத்தம் ஒன்பது குழிகளை நிரப்ப வேண்டும். பத்தாவது குழி காலியாக இருக்க வேண்டும்.

15 நாள் கழித்து, ஒன்பதாவது குழியில் இருக்கும் கழிவுகளை வெட்டி எடுத்து பத்தாவது குழியில் நிரப்பி, காற்றுப்போகாமல் மூடி வைக்க வேண்டும். அடுத்து எட்டாவது குழியில் இருக்கும் கழிவை ஒன்பதாவது குழியில் கொட்டி மூட வேண்டும். இப்படி அனைத்துக் குழிகளிலும் உள்ள கழிவுகளையும் குழி மாற்றும்போது அவை புரட்டப்பட்டுவிடும். அடுத்த 15 நாள்களில் இந்தக் குழிகளில் இருக்கும் கழிவுகள் நன்றாக மட்கி உரமாக மாறிவிடும்.

நாம் மொத்தம் 9 ஆயிரம் கிலோ (9 டன்) கழிவுகளைக் கொட்டியிருந்தாலும், உரமாக எடுக்கும் போது, 8,100 கிலோ ( 8.1 டன்) அளவில் கிடைக்கும்.

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்



2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம்..
காரணம் ஊரில் யாருமே சொட்டுநீர் குழாய் அமைக்காத போது நாம் மட்டுமே அமைக்கிறோம் என்று..
சரி பூனைக்கு நாமே மணி கட்டிவிடலாம் என்று கட்டிவிட்டோம்..
ரசாயன விவசாயம் செய்யும் போது இந்த சொட்டுநீர் குழாய்களை வருடத்திற்க்கு ஒரு முறை ஆசிட் பாசன நீரில் கலந்துவிட்டு சுத்தம் செய்து விடுவோம்.(ஹைட்ரோ அல்லது சல்பூரிக்)
ஆனால் ரசாயனத்தை நிறுத்தியபின் நேரடியாக இது போல அமிலத்தை சொட்டுநீர் குழாயில் விட மனது வரவில்லை..
காரணம் இது போல அமிலம் கலந்துவிட்ட நீர் நிலத்தில் பாயும் போது மண்ணில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று..

2010 லிருந்து அமிலம் விட்டு சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்வதை நிறுத்தி
சுத்தமான நாட்டு கோமியம், EM திரமி என்று பாசன நீரில் கலந்து விட ஆரம்பித்தேன்..
ஏற்கனவே ரசாயன உரங்களை தண்ணீரில் விட்டதாலும் கிணற்று நீரின் உப்பு தன்மை அதிகமானதாலும் குழாய் ஓட்டைகள் அவ்வளவாக சுத்தமாவில்லை..

ஒரு கட்டத்தில் சொட்டுநீர் குழாய் கம்பெனிகாரர்களை அழைத்து பார்த்த போது "இதை நீங்க அமைத்து பணிரெண்டு வருஷம் ஆனதால் பெரும்பாலான தூவரங்களும் அடைச்சிடுசுங்க,
அதனால இதை கழட்டி வீசிவிட்டு புது டியூப் போடறதை தவிர வேறு வழி
இல்லை  "என்றனர்..
"சரி எவ்வளவு ஆகும்ங்க?
கணக்கு போட்டார்கள்..
மீட்டருக்கு ஒரு டியூப் என்பதால் ஏக்கருக்கு முப்பதாயிரம் வரும் ங்க ..
அப்போ இரண்டு ஏக்கருக்கு அறுபதாயிரம்
சரி நான் யோசித்து சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டேன்..

உட்புறமும், வெளிபுறமும் சொட்டுநீர் குழாயில் உள்ள உப்பு படிவத்தை நீக்க வேண்டுமென்றால் ஆசிட் விடுவதை தவிர வேறு வழியில்லை ..
ஆசிட் விட்டால் நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு அதிகம் ..
இதை செய்யலாம்னா அறுபதாயிரம் ரூபாய் செலவு செய்து குழாயை மாற்ற வேண்டும்
என்று சிந்தித்து மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன்..
சரி இன்னொரு முறை ஆசிட் வாங்கி வேறு வழியில் சுத்தம் செய்லாம் என்ற பல நண்பர்களின் ஆலோசனை கேட்டேன்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னார்கள்..
சரி நாமே ஒரு புது முயற்சியில் இறங்கலாம் என்று சொட்டுநீர் குழாய்களை சுருட்டி ஓர் இடத்தில் அடுக்கினேன் வெள்ளாமை இல்லாத நிலத்தில்..
காடு ஏகமும் அமிலம் போனால்தானே மண்ணுக்கு கெடுதல் என்று..
2" (2 இஞ்ச்) PVC குழாய் இருபது அடி (ஒரு லென்த்)
PVC குழாய் முடியும் இடத்தில் இரண்டு பக்கமும் மூன்று அடி உயரம் கொண்ட
"V "வடிவ கால்களை நட்டி அதில் இரண்டு இஞ்ச் பைப்பை கயிற்றால் கட்டி அதில் முக்கால் பங்கு நிறையும் அளவுக்கு (ஹைட்ரோ) ஆசிட்டை ஊற்றினேன்..
ஐந்து ஐந்து சொட்டு நீர் குழாய்களை எடுத்து ஒரே நேரத்தில் PVC பைப்புக்குள் உள்ளே விட்டு மெதுவாக மறுபுறம் உறுவி அதை அப்படியே இரண்டு நாள் வெயிலில் உலர விட்டேன்..
இப்படி செய்யும் போது ஆசிட் சொட்டு நீர் குழாய் முழுவதும் நணைந்து வெளியே வந்தது..
இரண்டு முறை அதாவது பத்து குழாய்களை ஆசிடில் நணைத்து விட்டால் அடுத்த முறை குழாயை நணைக்கும் போது குறைந்துள்ள ஆசிட்டை கொஞ்சம் PVC ல் ஊற்றி விட்டேன்..
இப்படி செய்ததில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கேன் (சுமார் முப்பத்தி ஐந்து லிட்டர்) ஹைட்ரோ ஆசிட்,  பத்து ஆண் ஆட்கள் தேவைபட்டது..

எல்லா பணியும் முடித்து இரண்டு நாள் கழித்து சொட்டு நீர் குழாயை வெள்ளாமை காட்டில் பொருத்தி தண்ணீரை எடுத்து விட்டு ஒரு மணி நேரம் ஓடவிட்டு
(End cap) கழட்டிவிட்டு பார்த்த போது படிந்திருந்த உப்பு படிவங்கள் வெளியே வந்தது..

பிறகு End cap யை அடைத்து நீர் பாய்ச்சிய போது எல்லா தூவரங்களிலும் சீராக நீர் வடிந்தது..

ஆக ஒரு ஏக்கர் சொட்டு நீர் குழாய் உப்பு
நீக்க,
ஆட் கூலி 3,000
ஆசிட்        1,000
ஒரு லைன்த்
பிவிசி பைப் 300 என்று 4,300  ரூபாயில் சொட்டுநீர் குழாய்களை புதிப்பித்துக்கொண்டேன்..

நாட்டு எருமை

நாட்டு எருமை பற்றிய தகவல்கள்



அந்த காலத்தில் விவசாயிகள் பயிரிட்ட இயற்கை விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்தது இந்த நாட்டு எருமைகள் சாணம் மற்றும் கோமியம் தான்.

கால்நடைகளில் அதிக சத்து நிறைந்த சாணம் மற்றும் கோமியம் இந்த நாட்டு எருமை களுடையது தான். இதன் மூலம் தயார் செய்யும் மண்புழு உரம் நல்ல தரம் வாய்ந்தது. மற்றும் சத்து நிறைந்தது .

எந்த ஒரு பிரத்யேகமான பராமரிப்பு இல்லாமலே. வெறும் மேய்ச்சலுக்கு மட்டுமே அனுப்பி வேளைக்கு இரண்டு லிட்டர் பால் கறந்தன.அதாவது கொட்டகைகள் கூட இல்லாமல் மர நிழல் களில் பராமரிக்கப் பட்டன

சாதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாதலால் பெரும்பாலும் எந்த நோயும் தாக்காது. குடல் புழு நீக்கம் தேவை இல்லை.

சிறிது வெள்ளை நிறம் காணப்படுவதால் வெயில் தாங்கும் சக்தி அதிகம். ஊருக்கு ஒரு எருமை கடா கடவுளுக்கு நேர்ந்து விட்டு விடுவதால் இனப்பெருக்கம் நடக்க தடை இல்லாமல் இருந்தது.

சக்தி வாய்ந்த பால் நாட்டு எருமை உடையது.குழந்தைகள் அந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடன் வளர்ந்தார்கள்.

சாணத்தில் நுன்னுயிர்கள் அதிகம்.அதாவது நாட்டு பசுக்கள் சாணத்தை விட.கோமியம் அடர்த்தியாக இருக்கும். அதாவது நைட்ரஜன் சத்து அதிகம்.

கன்றுக்குட்டி பிறந்த இரண்டரை வருடங்களுக்கு பிறகு சினைக்கு வர ஆரம்பிக்கும். சினைக்காலம் 300 நாட்கள். ஒரு நாட்டு எருமை எட்டு   கன்றுக்குட்டிகள் வரை ஈனும் சக்தி உடையது. பற்கள் தேய்ந்து விட்டால் பிறகு சினை பிடிப்பது இல்லை. 

நாட்டு கோழி

நாட்டு கோழி பற்றிய தகவல்கள் 



மனிதன் நாடோடியாக இருந்த காலம் முதலே தன்னுடன் வளர்த்து வந்த ஒரே பறவை நாட்டு கோழி. அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கும் சக்தி உடையவை.

இவற்றில் இடத்திற்கு தக்கவாறு பல ரகங்கள் உள்ளன. நம் நாட்டில் பிரபலமான ரகங்கள். அசில்,பெருவிடை கோழி. சிறுவிடை கோழி. கடக்நாத் என்ற கருங்கோழி.

பெருவிடை கோழிகள் என்பவை பல ரகங்கள் உள்ளன.  அசில். ' அதாவது கிளிமூக்கு விசிறி வால் .நாமக்கல் பகுதியில் உள்ள பெருவிடை கருங்கோழி. போன்றவை.

கிளி மூக்கு விசிறி வால் கோழிகள் அதிக பிரசித்தி மற்றும் விலை உயர்ந்தவை.   இவற்றில் வெள்ளை நிற சேவல்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை விலை போக கூடியவை.

நாட்டு கோழிகளை பண்ணைகளில் வளர்ப்பது விட வெளியில் மேயவிட்டு வளர்ப்பது சிறந்தது. ஏனெனில் நாட்டு கோழிகள் அதிக தீவனம் உட்கொள்ளும். இரவில் மரங்கள் மீது அமர்த்துவது(பாதுகாப்பு இருந்தால்)நோய்கள் தாக்காது இருக்க வாய்ப்பு.

கோழிகள் மூலம் குஞ்சு பொறிப்பது சிறந்தது. 21 நாட்களில் பொரிக்கும். அடை முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது சிறந்தது. அடை வைப்பதற்கு ஐந்து மணி நேரம் முன்பு வெளியில் வைக்க வேண்டும்.

மஞ்சள் . வேப்பிலை மற்றும் சிறிதளவு தும்பை இலை இவற்றின் சாறு கலந்த தண்ணீர் ல் முட்டைகளை முக்கி எடுத்து அடை வைப்பதன் மூலம் முட்டைகளை தாக்கும் கிருமிகளில் இருந்து பாது காக்கலாம்.

பெருவிடை கோழிகள் பத்து முட்டைகளுக்கு மேல் இடாது.சிறுவிடை கோழிகள் அதிகபட்சம் 21 முட்டைகள் வரை இடும். தீவனத்தை பொருத்து.அடைகாக்க சிறுவிடை கோழிகளை பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் குஞ்சுகளை மிதிக்காமல் மற்றும்  எதிரிகளிடம் இருந்து  பாதுகாக்கும்.

கண்டிப்பாக மணலில் மட்டுமே கோழிகளை அடை வைக்க வேண்டும். ஏனெனில் புற ஒட்டுன்னிகளை தவிர்க்கலாம். மற்றும் அனைத்து முட்டைகளும் பொறிக்க வாய்ப்பு. 12 முட்டைகள் மட்டுமே ஒரு கோழியின் கீழே வைக்க வேண்டும்.

பெரும்பாலும் நாட்டு கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவை. ஆனாலும் தடுப்பூசி அளிப்பதன் மூலம் நூறு சதவீதம் நோய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற இயலும். இவற்றை அதிகம் தாக்கும் நோய்கள் வெள்ளை கழிசல் மற்றும் கோழி அம்மை.

கோழிகள் பருவத்தை அடைய குறைந்தது 150 நாட்கள் ஆகும். ஒரு மாத குஞ்சுகளை விற்பனை செய்வது அதிக லாபம். 1 _1/2 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்து விட வேண்டும்.

வாரம் நூறு நாட்டு கோழி முட்டைகளை விற்பனை செய்யும் அளவுக்கு இருந்தாலே இது ஒரு உபரி வருமானம்.

பெருவிடை சேவல் குஞ்சுகள் சிறு வயது முதலே சண்டை யிடுவதால் அவற்றை தனி தனியாக கூண்டில் அடைத்து வளர்ப்பது சிறந்தது.

பத்து முதல் பதினைந்து கோழிகளுக்கு ஒரு சேவல். தீவனம் நாமே தயார் செய்வது நல்லது . அசோலா மற்றும் தீவன புல் வகைகளை சிறு துண்டுகளாக வெட்டி போடுவதன் மூலம் கணிசமான அளவு தீவன செலவு குறையும்.

சிறு தானியங்கள் அதிகமாக கொடுக்கும் போது அதிக சுண்ணாம்பு சத்து கிடைக்கும். இதனால் கெட்டியான ஓடுகளை உடைய அதிக முட்டைகள் கிடைக்கும்.

மீன் அமிலம் தண்ணீர் ல் கலந்து அளிப்பதன் மூலம் கோழிகள் அதி வேகமான வளர்ச்சி அடையும்.

கிரிராஜா பெட்டை கோழிகளுடன் சண்டை சேவல் இனங்களை கலக்கும் போது அருமையான புதிய நாட்டு கோழி இனம் கிடைக்கிறது.  இவை நாட்டு கோழியின் குணாதிசயங்களை பெற்று இருக்கும். அதிவேக வளர்ச்சி அடையும்.

வாரம் பத்து கோழிகளை விற்பனை செய்யும் அளவு வந்தாலே போதும். நீங்கள் அதில் வெற்றி அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆட்டு இறைச்சியை விட அதிகமாக மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரே இறைச்சி இதுதான். சந்தையில் அதிக மதிப்பு மற்றும் தேடி வந்து வாங்கும் வாய்ப்பு. 

மல்பெரி இலை ..!!

மல்பெரி இலை ..!!




🍃 மல்பெரி இலை... இந்த பெயரை கேட்டவுடன் உங்களுக்கு பட்டுப்புழு பற்றி ஞாபகம் வருகிறதா?

🌿 இந்த மல்பெரி இலைக்கும், பட்டுப்புழுவுக்கும் என்ன சம்மந்தம் என்றும், மல்பெரி செடி பற்றியும் தெரிச்சுக்கலாம் வாங்க.

மல்பெரி செடியும், பட்டுப்புழுவும்:

🍃 பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை.

🌿 ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.

🍃 மல்பெரிச் செடியானது வருடம் முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது.

🌿 நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்கு மிகவும் ஏற்றதாகும். எனினும் மற்ற இடங்களிலும் மல்பெரிப்பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியும்.

மல்பெரி செடி சாகுபடி:

🍃 மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

விதைக்குச்சிகள் தேர்வு செய்யும் முறை:


🍃 ஒரு எக்டர் மல்பெரி தோட்டம் அமைக்கத் தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 20 சென்ட் நிலம் தேவை.

🍃 பு ச்சி, நோய் தாக்காத, ஆறு முதல் எட்டு வயது முதிர்வுடைய செடியிலிருந்து விதைக்குச்சிகளை தேர்வு செய்யவேண்டும்.

🌿 தேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3-4 பருக்கள் உடைய சிறு விதைக்குச்சிகளாகவும், 15-20 செ.மீ நீளமுள்ளதாக, வெட்டவேண்டும்.

🍃 வெட்டும்போது ஒவ்வொரு விதைக்குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப்பகுதியில் சாய்வாகவும், பட்டை உரியாமலும், பிளவுபடாமலும் வெட்டவேண்டும்.

🌿 மல்பெரியை ஒருமுறை பயிரிட்டால் 20 முதல் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

🍃 மல்பெரிச் செடியை சாதாரண (90 - 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாக நடவு செய்யலாம்.

பட்டுப்புழு வளர்ப்பு:

🍃 மல்பெரி குச்சி நடவு செய்த பின், சுமார் ஆறு மாதக் காலத்துக்குப் பின் பட்டுப்புழு வளர்த்தல் சிறந்தது.

🌿 பட்டுப்புழு வளர்ப்பு மாத வருமானம் தருவதாலும், ஒரு ஏக்கர் மல்பெரியில் பட்டுப்புழு வளர்த்தால் சராசரியாக ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை லாபம் கிடைக்கும்.

🍃 மல்பெரி செடிகளுக்கு இடையில் வளரும் களை செடிகளை நீக்குவதற்கு களைகொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்து இரண்டு, மூன்று முறை களையெடுப்பது அவசியம்.

ஊடுபயிர் தேர்வு:

🍃 ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது பயிரிடப்படும் பகுதி, பருவம், மண் வகைக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். குறுகிய காலப் பயிராக இருக்க வேண்டும்.

🌿 மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா, நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கும் பயறு வகைகளைத் தேர்வு செய்யலாம்.

🍃 பாசிப் பயறு, உளுந்து, கொள்ளு, கொண்டைக் கடலை, நிலக்கடலை, சின்ன வெங்காயம், கொத்தவரை, மிளகாய், தக்காளி, வெள்ளரி, பு சணி போன்ற பயிர்களைப் புதிய மல்பெரித் தோட்டத்தில் ஊடுபயிராகப் பயன்படுத்தலாம்.

🌿 சில ஊடுபயிர்கள், மல்பெரியைத் தாக்கும் பு ச்சியினங்களைக் கவர்ந்து தாக்குதலில் இருந்து காக்கின்றன.

🌿 தீமை தரும் பு ச்சிகளை அழிக்கும் இரை விழுங்கிகள், சிலந்தி போன்றவற்றின் செயல்பாட்டையும் ஊடுபயிர் ஊக்குவிக்கிறது.

🍃 எனவே, புதிதாக மல்பெரித் தோட்டம் அமைக்கும் விவசாயிகள் இதுபோல ஊடுபயிர் சாகுபடி செய்து பயனடையலாம்.

🍃 மல்பெரி வரிசைகளுக்கு இடையே ஐந்து அடி இடைவெளியில் தொடர்ந்து ஊடுபயிர் செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.